For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமரன் ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மாணவர் வழக்கு!

09:35 PM Dec 04, 2024 IST | Web Editor
அமரன் ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும்   நீதிமன்றத்தில் மாணவர் வழக்கு
Advertisement

அமரன் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி கல்லூரி மாணவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு ஜி.வி. பிரகாஷின் இசையும் ஒரு முக்கிய காரணமாகும். இச்சூழலில் தான் தற்போது அமரன் படக்குழுவினர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

போரூர் ராமச்சந்திரா கல்லூரியில் பி.டெக் படித்து வரும் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த வாசீகன் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,

“தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படத்தில் எனது கைப்பேசி எண், நடிகை சாய்பல்லவியின் எண்ணாக இருக்கும் காட்சி இடம்பெற்றது. இதனால் அக்.31 முதல் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின் அந்த குறிப்பிட்ட காட்சியை நிறுத்தி விடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த காட்சிகள் நீக்கப்படாததால், தொடர்ந்து அழைப்புகள் வருகிறது. எனது எண்ணை அனைத்து ஆவணங்களுக்கும் இணைத்துள்ளதால் அதனை மாற்ற முடியாது. சினிமாவில் வரும் காட்சிகளால், தனிமனிதர்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை, அனுமதி வழங்குவதற்கு முன் தணிக்கைத்துறை உறுதி செய்ய வேண்டும்.

அதனால் தீர்ப்பு வரும் வரை அமரன் திரைப்படத்தை திரையிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும். அமரன் படத்துக்கான தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தெரிந்தே கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement