For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Alt News முகமது ஜுபைருக்கு மத நல்லிணக்க விருது! யார் இந்த முகமது ஜுபைர் முழு விபரம் இதோ!

10:35 PM Jan 26, 2024 IST | Web Editor
alt news முகமது ஜுபைருக்கு மத நல்லிணக்க விருது  யார் இந்த முகமது ஜுபைர் முழு விபரம் இதோ
Advertisement

 2024 ஆம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு தமிழ்நாடு அரசு வழங்கி கௌரவித்திருக்கும் நிலையில், யார் இந்த முகமது ஜுபைர் என்று பார்க்கலாம். 

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு விருதுகளும் வழங்கப்பட்டன. இதில் கோட்டை அமீர் பெயரில் விருது வழங்கப்படுகிறது. அதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது.

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது என்றால் என்ன:

கோவையில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கோட்டை அமீர். பிறப்பால் இஸ்லாமியர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்துக்காக வாழ்ந்தவர். நாட்டையே அதிரவைத்த பாபர் மசூதி சம்பவத்தின்போது, தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமலும் மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து – முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்த அமைதிக் குழு அமைத்து, அதற்கு அவரே தலைவராகவும் இருந்தார். மசூதி மட்டுமல்ல, இந்து கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும்கூட அமீருக்கு நல்ல மரியாதை இருந்தது.

இது பிடிக்காத சிலர், 1994-ம் ஆண்டு அவரைக் கொடூரமாகக் கொலைசெய்தனர். இதையடுத்து, கோட்டை அமீரின் பெயரில், ``ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்" என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கோட்சை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் - முகமது ஜுபேர்

இந்நிலையில், இந்த ஆண்டு கோட்சை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் முகமது ஜுபேருக்கு வழங்கப்பட்டது.  இந்த முகமது ஜுபேர் 29 டிசம்பர் 1983 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார்.  எம்.எஸ். ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டம் பெற்றார். மேலும், மென்பொருள் பொறியாளராகப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார்.

2017-ம் ஆண்டு சக முன்னாள் மென்பொருள் பொறியாளர் பிரதிக் சின்ஹா-வுடன் இணைந்து," Alt News" என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கி சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க உதவி வருகிறது.

முன்னதாக, முகமது ஜுபேர் நோக்கியாவில் தொடர்ந்து பணிபுரியும் போது சின்ஹாவிற்கு  இணையதளத்தை இயக்க உதவினார். ஜுபேர் இறுதியாக செப்டம்பர் 2018 இல் மென்பொருள் நிறுவனத்தை விட்டு வெளியேறி Alt News இன் முழுநேர ஊழியராக ஆனார். மேலும், டிசம்பர் 16, 2019ஆம் ஆண்டு , Alt News ஐ இயக்கும் பிராவ்தா மீடியா அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழுவில் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சியின் உண்மை தன்மையை சரிபார்த்து, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் உள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இதே போன்று பல விவகாரங்களில் உண்மைக்கு புறம்பாக இணையத்தில் பரப்பப்பட்ட பல தகவல்கள் வதந்திகள் என பலவற்றை கண்டுபிடித்து அனைவருக்கும் எடுத்துரைத்தார். இது தொடர்பாக சில கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியிருக்கிறார். அப்போது முகமது ஜுபைர் கைதுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, Editors Guild of India எனும் பத்திரிக்கையாளர் அமைப்பு, டிஜிட்டல் செய்தி ஊடக நிறுவனங்களின் அமைப்பான DIGIPUB-யும், ஐ.நாவின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸின், ஜெர்மனி அரசு ஆகியவை கடும் கண்டங்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு எதிராக வதந்தி பரப்பி வருவதை தடுத்து தமிழ்நாட்டில் சாதி, மத, இன மற்றும் மொழியினால் ஏற்படும் வன்முறைகள் நிகழாத வண்ணம் செயல்பட்டுள்ளார். இவரின் இந்த செயலை பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

Tags :
Advertisement