அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
இதனை அடுத்து, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (20.03.2024) மாலை 5.30 மணி அளவில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர்.
இதனை அடுத்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2011-ல் அதிமுக,தேமுதிக இடையே உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும், 2026-ம் சட்டமன்ற தேர்தலிலும் நிச்சியம் இந்த கூட்டணி வெற்றி பெறும் எனக் கூறினார்.