திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - தனி சின்னத்தில் போட்டி என திருமாவளவன் அறிவிப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில் திமுக – விசிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் வருகை தந்தனர். இ தனைத் தொடர்ந்து திமுக - விசிக இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் இந்த முறை விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - தனி சின்னத்தில் போட்டி என வைகோ பேட்டி!
தொகுதி பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் கையெழுத்தானது. 2 தனி தொகுதி, ஒரு பொது தொகுதி கேட்டிருந்த நிலையில், 2 தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனி சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இன்னும் தகவல் வரவில்லை. நிச்சயம் விசிக தனி சின்னத்தில் தான் போட்டியிடும். 2019 தேர்தலில் கையாண்ட பகிர்வு முறைபோல் இந்த முறையும் கையாளப்பட்டது” என்று தெரிவித்தார்.