மூலிகை சாகுபடிக்கு ரூ.5 கோடி: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் மூலிகை சாகுபடி திட்டங்கள், சூரிய தோட்டம், பூங்காக்கள் எனப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார. அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார்.
வேளாண் பட்ஜெட் அறிவிப்பில், மூலிகைப் பயிர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கன்னியாகுமரியில், சூரிய உதயப் புள்ளிக்கும், மறைவுப் புள்ளிக்கும் இடையே சூரியத் தோட்டம் அமைக்கப்படும். இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
காவிரி ஆற்றின் படுகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச் சமுத்திரம் என்ற இடத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும். ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய 100 இரக ரோஜா வகைகள் நடவு செய்யப்பட்டு பூங்கா மேம்படுத்தப்படும். விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு. ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.