களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு!
"முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" மூலம் களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது,
"முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" மூலம் களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கப்படும். மண்புழு உரம் ஊக்குவித்தலுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் காடுகள் திட்டம் மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 ஊராட்சிகளக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.