ஐஏஎஸ் அதிகாரிகளை அமித்ஷா மிரட்டியதாக குற்றச்சாட்டு - ஜெய்ராம் ரமேஷிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!
ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா மிரட்டியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு இன்றோடு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் ஊடங்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் , தேசிய செய்தி தொடர்பாளாருமான ஜெய்ராம் ரமேஷ் “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேசி அவர்களை மிரட்டியுள்ளார்” பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது X தள பக்கத்தில் பதிவிட்டதாவது:
”தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்துள்ளார். அதோடு மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளார். அரசு அதிகாரிகள் எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அரசமைப்பை நிலைநிறுத்த வேண்டும். ஜூன் 4-அம் தேதி மக்களே வெற்றி பெறுவர்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பான விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு ஜெய்ராம் ரமேஷிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது..
“ மாவட்ட ஆட்சியர்கள்தான் தேர்தலின்போது அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுகின்றனர். எனவே ஜெய் ராம் ரமேஷின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எந்தவொரு மாவட்ட ஆட்சியரும் தாங்கள் மிரட்டப்படுவதாக இது வரை புகார் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் மூத்த தலைவர் சுமத்திய குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு பொது நலனுக்காக அதற்கான விவரங்களை தருமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் செயல்முறை ஒவ்வொரு தேர்தல் அதிகாரியின் புனிதமான கடமையாகும். ஒரு மூத்த, பொறுப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரின் இத்தகைய பகிரங்க அறிக்கை தேர்தல் நடைமுறைகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த காரணமாகிவிடும். எனவே, பொது நலனுக்காக அதுதொடர்பான ஐயங்கள் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அதற்காகவே ஜெய்ராம் ரமேஷிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது