தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - அருப்புக்கோட்டை மருத்துவமனையில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த
அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருபவர் உமா மகேஸ்வரி. இவர் இன்று(ஏப்ரல்.15) வழக்கம் போல் அரசு மருத்துவமனை எக்ஸ்ரே அறையை சுத்தம் செய்தபோது அங்கு பணியாற்றும் லேப் டெக்னீசியன் ராஜ் என்பவர் உமா மகேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு அவருடன் வாக்குவாதம் செய்து காலணியால் உமா மகேஸ்வரியின் கையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
வழி தாங்க முடியாமல் அழுது கொண்டே வெளியே வந்த உமா மகேஸ்வரி சக தூய்மை பணியாளர்களிடம் கூறியவுடன் அவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மருத்துவ அலுவலர் ராஜை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து அவரது அறையில் இருந்து வந்த ராஜை தூய்மை பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் தாக்குதலுக்கு ஆளான ராஜை மீட்டு அழைத்து சென்றதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில், தூய்மை பணியாளர் உமா மகேஸ்வரி காலணி அணிந்து எக்ஸ்ரே அறைக்குள் வந்ததாகவும், காலனியை வெளியே விட்டுவிட்டு வருமாறு ராஜ் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.