“எல்லா வாஷிங் மெஷின்களுக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் இருக்கும்...” - பாஜகவை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!
“எல்லா வாஷிங் மெஷின்களும் காலாவதி ஆவதற்கான தேதியைக் கொண்டிருக்கும்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்புடன் காணப்படுகிறது. 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தேர்தல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையிலான I.N.D.I.A. கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.
இதையும் படியுங்கள் : HYBE நிறுவனத்துக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசு - BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!
தொடர்ந்து 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடத்திய நிலையில், இம்முறையும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி நாடு முழுவதும் இருந்து வருகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் தனது கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன.
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது பாஜகவை விமர்சித்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பதிவு ஒன்றை தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எல்லா வாஷிங் மெஷின்களும் காலாவதி ஆவதற்கான தேதியைக் கொண்டிருக்கும்” என்று கூறி, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். எதிர்க்கட்சியினர் பாஜகவை வாஷிங் மெஷின் என்று விமர்சித்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் அதே பாணியில் பாஜகவை விமர்சித்துள்ளார்.