நாளை அனைத்துக்கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது.
குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் ராணுவம் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனிடையே, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டு காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரபரப்பான சூழ்நிலையில், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து 2-வது முறையாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.