"நீட் விவகாரம் தொடர்பாக ஏப்.9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"மருத்துவத்துறையில் நமது நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து விளங்குவதற்கு பல்லாண்டுக்காலமாக பின்பற்றப்பட்டு வந்த சிறப்பான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையே இந்த சாதனைகளுக்கு அடிப்படை. கடந்த 2006ல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயிலக்கூடிய பள்ளிக் கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூக நீதியும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு சம வாய்ப்பையும் உறுதி செய்யக் கூடிய சேர்க்கை முறையை முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உருவாக்கினார்.
சமூக நீதியை நிலைநாட்டி கிராமப் புறங்களில் வாழக்கூடிய ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கக் கூடிய இந்த முறையால்தான் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம். ஆனால், நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று பயில இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாது.
கிராமபுறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வழங்கப்படும் மருத்துவ சேவையையும் இந்த முறை எதிர்காலத்தில் பாதிக்கும். நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படிக்கும் வசதியான நகர்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பதின் அடிப்படையிலும், இந்த மாணவர் சேர்க்கை முறையானது சமூக நீதிக்கு எதிராக உள்ளது என்பதிலும் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நிதியரசர் A.K. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவினை இந்த அரசு அமைத்தது.
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த சட்டப்பேரவையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு மருத்துவ படிப்புக்கான சேர்க்கை சட்டம் 2021 என்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பப்பட்டது. எனது தலைமையில் 5.2.2022 அன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு இந்த சட்டமுடிவினை மீண்டும் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 8.2.2022 அன்று மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கான மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும், தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கமளித்தது. இதனை ஏற்காமல் மத்திய அரசு இந்த சட்டத்துக்கான ஒப்புதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், பேரவை தீர்மானங்களையும் மத்திய அரசு மதிக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும். நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய வரும் 9-ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.