நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டம் - எம்பிக்கள் சரமாரி கேள்வி!
மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) தொடங்குகிறது.
2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சர் வழங்கினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் தொடங்கியது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, பிரமோத் திவாரி, சஞ்சய் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பல தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், நீட் விவகாரங்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவி குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் அவர் குற்றச்சாட்டு சாட்டினார். அதேபோல உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவு கடைகளில் பெயர் பலகைகள் குறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கேள்வி எழுப்பினார்.