“கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”- தமிழ்நாடு அரசு உத்தரவு!
கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு, சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், தனியார் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து நேற்று (ஜன.23) தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் எனவும் மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்தது. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல மாநகரப் பகுதிக்குள் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: INDIA கூட்டணியில் இருந்தாலும் மே.வங்கத்தில் தனித்து போட்டி – மம்தா பானர்ஜி அறிவிப்பு.!
இந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"ஜன.24 -ம் தேதி இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது.
இதற்கு ஏற்றாற்போல் RED BUS, ABHI BUS உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
ECR மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும், சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் சித்தூர், RED HILLS வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது."
இவ்வாறு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.