“எனது கருத்துகள் முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள்” - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
தான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமோ, தனிப்பட்ட சித்தாந்தமோ கிடையாது என்றும், அவை முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பனந்தா சொனோவால், இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழில் ‘வணக்கம்’ என கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியவதாவது :
“தேசத்தின் முக்கியமான கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலமாக மாற்ற முடியும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். 75 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்களாக மாற்றும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 2,000 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமோ, எனது தனிப்பட்ட சித்தாந்தமோ கிடையாது. முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள். இங்கே இருக்கும் அரசு அவற்றை வெளியிட விடாது. ஆனாலும் கூட தடைகள் அனைத்தையும் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம்.
இதையும் படியுங்கள் : “மக்களின் சேவகன் நான்...” - தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், சரக்குகளை கையாள்வதில் 35% முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 38 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. ஆண்டு வளர்ச்சி 11% ஆக உள்ளது. இந்த வெற்றிகளின் பின்னணியில் மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் பங்களிப்பு உள்ளது. மத்திய அரசின் முயற்சி காரணமாக கடல் வாணிபம், நீர்வழித்துறையில் பெரும் புகழை நாடு ஈட்டி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கப்பல் பயணங்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. கடல் வாணிபத்துறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.