100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு திருவிழா.. திருமங்கலத்தில் கூடிய 10000க்கும் மேற்பட்ட ஆண்கள்!
திருமங்கலம் அருகே ஆண்களே சமைத்து உண்ணக்கூடிய கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு 10,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியில், பழமை வாய்ந்த ஸ்ரீ கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சாமிக்கு உருவம் கிடையாது. பாறையை சுவாமியாக வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடனாக செலுத்தும் ஆடுகளை, திருவிழா அன்று நள்ளிரவில் பலியிட்டு ஆண்கள் மட்டுமே சமைத்து, அதிகாலை சாமிக்கு படைத்து பூஜை செய்த பின்பு, அங்குள்ள வெற்றிடத்தில் மண் தரையில் அங்கு கூடும் ஆண் பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட கறுப்பு ஆடுகளை பலியிட்டனர். இத்திருவிழாவில் 10,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் எவ்வித வேறுபாடுமின்றி அனைவரும் மண் தரையில் அமர்ந்து கறி விருந்தை உண்பர். இவ்விழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. விழா துவங்கிய 3 நாட்களுக்கு பெண்கள் எவரும் அப்பகுதிக்கு வருவதில்லை. இவ்விழாவில், திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை உள்ளிட்ட சுற்றுப் புற பகுதிகளிலிருந்து மக்கள் ஒன்றுகூடுவர்.
முன்னதாக, பக்தர்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டி கறுப்பு நிற ஆட்டுக் குட்டியை கோயிலில் விட்டுச் செல்வர். அந்த ஆடுகள் அப்பகுதியில் புல் பகுதியில் மேய்ந்து பெரிய ஆடுகளாக உருமாறிய பின், சுவாமிக்கு பலியிடுவது வழக்கம்.