இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்டு பிளாக்!
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தனர்.
மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில், 40 தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் விருப்பமனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சின்னம் இல்லாத ஓபிஎஸ் தரப்பு | தாமரையில் போட்டியிட வலியுறுத்தும் பாஜக?
இந்நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்தனர். இதையடுத்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் தேசிய துணை தலைவருமான கதிரவன், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், மாநில குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அதிமுகவில் இணைந்து இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தேனி, ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்க இருப்பதாகவும், விரைவில் தேசிய தலைவர்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் கதிரவன் தெரிவித்தார். அகில இந்திய அளவில் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து வந்த நிலையில், தற்போது அதிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்து இருப்பதாகவும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் தெரிவித்தார்.