ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதாகமாக வந்தது. அதன்படி, ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இதன் 415 பக்க தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் வெளியானது.
இந்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவம்பர் 2023 தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.