Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம்" - திருமாவளவன் எம்.பி. பேட்டி

அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
05:34 PM Jul 02, 2025 IST | Web Editor
அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Advertisement

சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

Advertisement

"காவல்துறையின் தனிப்படையினர் நடத்திய தாக்குதலில் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் உயிரிழந்துள்ளார். விசாரணை என்ற பெயரில் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு விசிக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. சம்பந்தப்பட்ட போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது ஆறுதல் அளித்தாலும் இது மீளா துயரம். காவல்துறையின் விசாரணையில் இருப்பவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திருப்பது ஆறுதலை தருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருப்பது முதலமைச்சரின் நேர்மையை காட்டுகிறது. அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பியை சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்தோம். FIR பதிவு செய்யப்படாத வழக்கில் காவல்துறையினர் புலன் விசாரணையை தொடங்கக்கூடாது என்பதுதான் சட்டம். FIR பதிவு செய்யாத வழக்கில் எதன் அடிப்படையில் இதனை அரங்கேற்றினார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. வழக்கமான காவல்நிலையத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவின் ஆய்வாளர் முதலில் இந்த புகாரை பெற்றிருக்கிறார்.

சிஎஸ்ஆர்ஐ சந்திருக்கிறார். எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். எஃப்ஐஆர்-ம் போடவில்லை. புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை மட்டும்தான் தந்திருக்கிறார். இதற்கிடையே, DSP தலைமையிலான தனிப்படையினர் எதன் அடிப்படையில் இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்கள். FIR இல்லாமல் விசாரித்தது அத்துமீறல். பின்னர் கொடூரமான தாக்குதலை நடத்தி படுகொலை செய்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கார்குண்டே, வி.ஆர். கிருஷ்ண ஐயர் போன்றவர்கள், "போலீசார் சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள்" என தெரிவித்திருக்கின்றனர்.

அந்த அளவிற்கு தேசிய அளவில் காவல்துறையினரின் அதிகார ஆணவம் அவ்வப்போது வெளிப்பட்டிருக்கிறது. அவர்களை மனித உரிமை உணர்வுள்ளவர்களாக விழிப்புணர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் புலன் விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என 11 கட்டளையை உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை எந்த காவல்துறை அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை. இந்த வழக்கில் சீருடை அணியாமல், வழிப்போக்கர் போல, கூலிப்படை போல வந்த அஜித்குமாரை தாக்கியுள்ளனர்.

இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அரச பயங்கரவாதம். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஒரு உயிரை மீட்க முடியாது. கைது செய்யப்பட்டுள்ளவர்களை பிணையில் வெளிவிடாமால், விரைந்து விசாரிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் நீதி வழங்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். அடித்து சித்ரவதை செய்தால் உண்மையை சொல்வார்கள் என்று போலீசாருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. நானும் இதுபோன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். போலீசார் துப்பாக்கியை என் வாயில் வைத்து மிரட்டினார்கள். போலீசாருக்கு மனித உரிமை என்றால் என்ன? என்று பயிற்சி கொடுக்க வேண்டும்"

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags :
AjithkumarAjithkumar CaseLatest NewsPolicesivagangathirumavalavanVCK
Advertisement
Next Article