அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா ,ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து ஜூலை 14 ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் நிகிதா, அஜித்குமாரின் சகோதரர் நவீன், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநராக இருந்த தனிப்படை காவலர் ராமச்சந்திரனை ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டது. பின்னர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ குற்றப்பத்திரிக்கையின் நகலைக் கேட்டு மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இதற்கு எந்தவித பதிலும் வராத நிலையில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தகவலை தர தாமதிக்கிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த முதற்கட்ட குற்றபத்திரிக்கையில் பல்வேறு குறைகள் இருப்பதாகவும் அதனை சரி செய்து அதற்கான ஆவணங்களை இணைத்து பின்னர் குற்றப்பத்திரிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டுமென மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டுள்ளார்.