அஜித்குமார் மரண வழக்கு - வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர் விசாரணையின் போது அவர் காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதற்கிடையே, காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், அவரின் கண், வாய் உள்ளிட்ட இடங்களில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதற்கிடையில், இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனை தொடர்ந்து போலீசாரால் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்திருந்த சக்தீஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாக பதிவு செய்தார்.
இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினார்கள். இதனால் தனக்கும், தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.