வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் அஜய் ராய் - யார் இவர்?
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் அஜய் ராய் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதன் பின்னர் 43பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 57 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. இதில் தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட 45வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதன்படி தமிழ்நாட்டில் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், சசிகாந்த் செந்தில் , மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், கோபிநாத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மற்றும் நெல்லை தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை.
4ம்கட்ட வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் கட்சியில் உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கியத் தலைவராக அறியப்படுகிற அஜய் ராய் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் முக்கியமான அறிவிப்பு என்னவெனில் உபியில் அஜய் ராய் போட்டியிடும் தொகுதி பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியாகும்.
இதன் மூலம் அஜய் ராய் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேதான் நேருக்கு நேர் போட்டி நிலவுகிறது. வாரணாசி யார் போட்டி என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் காங்கிரஸ் கட்சி அஜய் ராயை களமிறக்கியுள்ளது.
யார் இந்த அஜய் ராய்..?
- அஜய் ராய் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 1996 மற்றும் 2007 க்கு இடையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை கோலஸ்லா தொகுதியில் வெற்றி பெற்றார்.
- இதன் பின்னர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
- 2012ல் அஜய் ராய் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து உ.பி சட்டமன்றத் தேர்தலில் பிந்த்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே பிந்த்ரா தொகுதியில் போட்டியிட்டு அஜய் ராய் தோல்வியடைந்தார்.
- 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து இரண்டு போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார்.
- ஆகஸ்ட் 2023ம் ஆண்டு பிரிஜ்லால் காப்ரிக்குப் பதிலாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (UPCC) புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
- மார்ச் 23, 2024 அன்று வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.