காற்றின் தரம் முன்னேற்றம் - டெல்லியில் நிலை 4 கட்டுப்பாட்டை குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்ததை தொடர்ந்து, நிலை 4 கட்டுப்பாட்டை குறைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசுபாடு விவகாரத்தில் உத்தரவுகளை ஒழுங்காக செயல்படுத்தாதால், விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென டெல்லி தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வழக்கு விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்பேரில் டெல்லி காற்று மாசுபாடு வழக்கு தொடர்பாக தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் உச்ச நீதிமன்ற விசாரணையில் ஆஜரானார்.
அப்போது, “டெல்லியில் கட்டுமான தொழிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அந்த தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டபடி உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 ரூபாய் வீதம் 90 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.
8000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் 2000 ரூபாய் தான் கொடுத்திருக்கிறீர்கள். இது நீதிமன்ற அவமதிப்பு. எஞ்சிய 6 ஆயிரம் ரூபாயை உடனடியாக நாளையே வழங்க வேண்டும். உதவித்தொகை பெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களும் தங்களைப் போர்ட்டலில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டதா?டெல்லியில் 90,693 கட்டுமான தொழிலாளர்கள் தான் உதவித்தொகை பெற தகுதியானவர்களா ?
இல்லை தலைமைச் செயலாளர் அவ்வாறு தான் கூறுகிறார் என நாங்கள் பதிவு செய்து கொள்ளலாமா? அது தவறு என்று உறுதியானால், நீங்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். உடனடியாக கட்டுமான பணியாளர்கள் சங்கங்களுடன் டெல்லி அரசு கூட்டம் நடத்தி, தகுதியான கட்டுமான தொழிலாளர்கள் போர்ட்டலில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் “டெல்லியில் தற்போது காற்று மாசுபாடு சற்று குறைந்துள்ளது. எனவே டெல்லியில் நிலை 4 கட்டுப்பாடுகளை தளர்த்துகிறோம். கடந்த நான்கு நாட்களில் காற்று தரக்குறியீடு 300க்கு கீழ் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு காற்று தர மேலாண்மை ஆணையம் டெல்லியில் நிலை 4 கட்டுப்பாடுகளை தளர்த்தி, நிலை 2 மற்றும் மூன்றாம் நிலை கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து டெல்லி காற்று மாசுபாடு வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.