காற்று மாசுபாடால் டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; BS-III பெட்ரோல், BS-IV டீசல் கார்களுக்கு தடை!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், அங்குள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மூடுபனி காணப்படுவதால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 346 ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டெல்லியின் இந்தியா கேட், அக்ஷர்தாம், ஆனந்த் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், நடைபயிற்சி செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு - ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
இந்நிலையில் ஆரம்பப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு 2 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் தேவையற்ற கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், BS-Ill பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் LMV வாகனங்களை ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ஓட்டினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.