180 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஏர் இந்தியா நிறுவனம்.. காரணம் என்ன?
விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது மொத்த ஊழியர்களில் 1%க்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் 12-ம்தேதி அன்று விமான நிறுவனம் தனது 53 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், நிர்வாகம் திடீரென 180 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. டாடா குழுமம் ஏர் இந்தியாவை கையகப்படுத்தியதிலிருந்து, நிறுவனத்திற்குள் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முயன்று வருகிறது. புதிய செயல்பாடுகள், செலவு குறைப்பு மற்றும் நிர்வாக மேம்பாடுகள் ஆகியவை இவற்றுள் அடங்கும்.
நிறுவனம் வழங்கிய விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS) மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாத ஊழியர்களே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஏர் இந்தியா ஊழியர்கள் தெரிவித்துள்ளார். இந்த திடீர் பணிநீக்கம் தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி, நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாகவும், வேறு வழியின்றி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
ஏர் இந்தியாவின் செயல்பாடு ஒரு தேசிய விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. பல கேள்விகள் எழுந்துள்ளன. பணிநீக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றா, அல்லது வேறு மாற்று வழிகள் இருந்ததா? தொழிலாளர்களின் நலனை யார் பாதுகாப்பது? இந்த நடவடிக்கை நிறுவனத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்துமா அல்லது மேலும் சிக்கல்களை ஏற்படுத்துமா? இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.