'அதிமுகவின் போக்கு சரியாக இல்லை' - அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி!
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், அதிமுக தலைமை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மைத்ரேயன், "அதிமுகவின் போக்கு தற்போது சரியாக இல்லை" என்று தெரிவித்தார். மேலும், கட்சியின் தலைமை டெல்லியின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்த மைத்ரேயன், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களைப் போல இபிஎஸ் தன்னை நினைத்துக் கொள்கிறார். ஆனால், உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது" என்று கடுமையான தொனியில் கூறினார்.
மக்களுக்கு சேவை செய்யவே தான் திமுகவில் இணைந்ததாக மைத்ரேயன் தெரிவித்தார். அரசியல் அனுபவமும், மக்களுக்கான திட்டங்களையும் நன்கு உணர்ந்த ஒரு தலைவர் தலைமையிலான கட்சியில் பணியாற்றுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். அவரது இந்த கருத்து, தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.