"தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" - இபிஎஸ் பேட்டி!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் கோவை மேயர் மலரவன் கடந்த 17 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கோவை பாரதிநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உருவ படத்திற்க்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
"அதிமுக முன்னாள் கோவை மேயர் மலரவன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்றவர். அதிமுகவில் பல்வேறு பதவிகளை பெற்றிருந்தார். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். மேயராகவும் , எம்.எல்.ஏ வாகவும் இருந்து மக்களின் அன்பை பெற்றவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கேரளா மாநில இடுக்கி பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. அதேபோல் ஆந்திர அரசும் பாலாற்றின் குறுக்கேயும் தடுப்பனை கட்டப்பட்டு வருகிறது. இதனை இந்த திமுக அரசு தடுக்க தவறிவிட்டது. தண்ணீர் தேவைக்காக அண்டை மாநிலத்தை நம்பி நாம் இருக்கிறோம். திமுக அரசு பல்வேறு தடுப்பணை கட்டுவதாக தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. தடுப்பணை கட்டாமல் நீரை சேமிக்க முடியாமல் இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்” – டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!
தமிழ்நாடு பல வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து வருகிறது. இதற்காக திமுக அரசும், தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை"
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சியினரும் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என சொல்கிறார்கள் என செய்தியாளர்களின் கேள்விக்கு இபிஎஸ் பதிலளித்ததாவது: "4 ஆம் தேதி தெரியும் யார் வெற்றி பெறுவார்கள் என்று. மேலும், யார் என்ன சொன்னாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" என தெரிவித்தார்.