"வனவிலங்குகள் பிரச்னை குறித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்" - எஸ்.பி.வேலுமணி பேட்டி!
கோவை தேவராயபுரத்தில் காட்டு யானை தாக்கி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் கால்நடை மருத்துவர் விஜயராகவனை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், வடக்கு தொகுதியில் காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அதிலும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டுயானை ஒருவரை தாக்கியுள்ளது. கும்கி யானை வைத்து அதை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நினைத்தாலும் அது முடியவில்லை.
இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோலக்ஸ் யானையால் உயிரிழப்பு, படுகாயம் மற்றும் நாள்தோறும் மக்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். கால்நடை மருத்துவர் விஜயராகவனை ரோலக்ஸ் காட்டு யானை தாக்கியுள்ளது. மருத்துவரை சந்தித்தேன், அவர் நலமாக உள்ளார். நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மனித மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சட்டமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளேன். அதிமுக ஆட்சியில் அகழிகள் பராமரிக்கப்பட்டு யானை வராமல் தடுக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டது.
திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கை 200 ஆக இருந்த நிலையில் கோவை பகுதியில் தற்போது 50 பேர் தான் உள்ளனர். காவலர்கள், ரோந்து வாகனங்கள் அதிகரிக்க வேண்டும். மருத்துவர் விஜயராகவன் குணமாக ஒரு மாத காலம் ஆகும். வனவிலங்குகள் பிரச்சனை தொடர்பாக கூடிய விரைவில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். கையாலாகாத அரசாக திமுக உள்ளது. மக்கள் உயிர் போன பிறகும் அரசு மெத்தனமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.