சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இதனையடுத்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.
மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் 6 மாத கால இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை நேற்று தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
நேற்று சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், கேள்வி நேரம் தொடங்கி நடந்து வருகிறது. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவையில் பேசி வருகின்றனர். இந்த கூட்டத்தில், கரூர் துயரம், கிட்னி திருட்டு விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். இந்த கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.