சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளியேற்றம்!
தொடர் அமளியால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில் கூடியது. கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை பாட அனுமதிக்கவில்லை எனக் கூறி ஆளுநர் புறப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது. ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டையில் 'யார் அந்த சார்?' என பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.