விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஜூன் 21) சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்றைய கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரம் ஆரம்பிக்கும் போதே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்னையை எழுப்பினர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் சட்டசபையில் கூச்சல் குழுப்பம் உருவானது. சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு உறுப்பினர் அமைதி காக்க வலியுறுத்தினார். ஆனால் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்னை எழுப்பியதால் அமளியானது.
தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா செய்தனர். இதையடுத்து சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவைக் காவலர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“கள்ளக்குறிச்சி சம்பவம் என் கவனத்திற்கு வந்தது, நடவடிக்கை எடுத்துள்ளேன். அதிமுகவினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றம் செய்து பேரவை விதிகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக குழப்பம் ஏற்படுத்தியதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவரும் கலந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு பேசினார்.
முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று சபாநாயகர் அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், சபா நாயகர் அழைப்பை ஏற்க மறுத்து அதிமுகவினர் புறப்பட்டனர்.