Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10:32 AM Jun 26, 2024 IST | Web Editor
Advertisement

பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல்,  வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, சட்டப் பேரவையின் 4-ம் நாளான இன்றும் (ஜூன் 26) அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும்படி சட்டப் பேரவைக்கு கருப்பு உடை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்தை நடத்த பேரவைத் தலைவர் அப்பாவு முயன்றார். அப்போது அதிமுக உறுப்பினா்கள் பேரவைத் தலைவரின் இருக்கை முன்பாக நின்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்ய பேரவைத் தலைவர் முயன்றார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர், பேரவை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் அதிமுக உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யக் கோரி அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர் குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

மக்கள் பிரச்னையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு இதுதான்”

இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
AIADMKAssembly SessionCMO TamilNaduDMKEdappadi palanisamyMK StalinMLANews7Tamilnews7TamilUpdatesSpeaker AppavuTN AssemblyTN Govt
Advertisement
Next Article