“அதிமுக மூழ்கும் கப்பல் இல்லை, கரை சேரும் கப்பல்” - தேனியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில்,தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
“எம்ஜிஆர், ஜெயலலிதா இங்குதான் போட்டியிட்டனர். இரண்டு முதலமைச்சர்களை கொடுத்த மாவட்டம்தான் தேனி. இங்கு அதிமுக ஆட்சியின் போதுதான் மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி, அரசு கலைக் கல்லூரி என பல இம்மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டது. திமுக அரசு தேனி மாவட்டத்திற்கு என்ன திட்டத்தை கொண்டுவந்தார்கள்?
அதிமுக ஆட்சியின் போது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மட்டும் அதிமுக ஆட்சி நடந்திருந்தால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டிருக்கும்.
காவிரி குண்டாறு நதிநீர் இணைப்பு நாங்கள் கொண்டுவந்தோம், அதை இவர்கள் கிடப்பில் போட்டுவிட்டார்கள். நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன், தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாக உள்ளது என்று. தற்போது தமிழகத்தில் போதை கஞ்சா போன்றவற்றிற்கு அடிமையாகி பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெற்றோர்கள் பயப்படுகின்றனர்.
அம்மா மருந்தகம், மடிக்கணினி, தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கான திட்டங்களை நிறுத்தியது திமுக அரசு. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தலுக்கு முன் பேசி வந்தனர். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இதில் ஏதும் செய்ய முடியாது எனக் கூறி விட்டனர். திமுகவின் 525 தேர்தல் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு நாமம் போடப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் விலை, நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிறைவேறவில்லை. மின்கட்டணத்தை ஒரே நேரத்தில் பன்மடங்கு உயர்த்தியது திமுக அரசு. மதுரை மாநகராட்சியில் ஆடு, மாடு, நாய், பூனை, குதிரை வளர்ப்பதற்கு வரி விதித்த அரசு இவர்கள்தான். பாஜகவை பார்த்து நான் பயப்படுகிறேன் என முதலமைச்சர் கூறுகிறார், பாஜகவை பார்த்து பயப்படுபவர்கள் நாங்கள் இல்லை.
எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல் என ஒருவர் கூறுகிறார். ஜெயலலிதா மறைந்ததும் முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக தர்மயுத்தம் நடத்தினார். அதிமுக ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்து திமுகவுக்கு ஆதரவாக இருந்தார். இரட்டை இலையை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். அதிமுகவின் தலைமை அலுவலகத்தை ரவுடிகளுடன் வந்து அடித்து உடைத்தார். யார் துரோகி? எங்களை விட்டு போக வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் அவர் கேட்கவில்லை.
2001ல் தான் நீங்கள் எம்எல்ஏ. ஆனால் நான் 1989ல் எம்எல்ஏ. கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளேன். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இது மூழ்கும் கப்பல் இல்லை. இது கரை சேரும் கப்பல், இதில் வந்தவர்கள் கரையேறலாம். அதிமுகவில் நான் ஒருவன் பொதுச்செயலாளர் இல்லை. தொண்டர்கள் ஒவ்வொருவரும் பொதுச்செயலாளர் தான். பத்திரிகை ஊடகத்தில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம். 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமைக்கும்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.