“அதிமுக தற்போது ஆபத்தில் உள்ளது” - முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
கன்னியாகுமரியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“பாஜக, அதிமுக கூட்டணி தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிமுக தொண்டர்களை குறி வைத்து பாஜக தலைவரை நியமித்து உள்ளனர். இதனால் தற்போது ஆபத்தில் இருப்பது அதிமுகதான். இது தேர்தலுக்காக குறி வைத்து ஏற்படுத்திய கூட்டணி அல்ல.
ஏனென்றால் பாஜகவுக்கும் தெரியும் அதிமுகவுக்கும் தெரியும் இந்த கூட்டணியால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று. அதிமுகவில் இருந்தவர் நயினார். அதனால் அதிமுக தொண்டர்களை குறி வைத்து தான் நயினாரை பாஜக தலைவராக நியமித்து உள்ளனர். தாமரை பூ மலர வேண்டும் என்றால் அதன் வேர் கிழே இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் அதற்கு வேர் இல்லை. அந்த கிழங்கும் இல்லை. வேரும், கிழங்கும் இருந்தால் தான் தாமரை மலரும். அது தமிழ்நாட்டில் மலர வாய்ப்பு இல்லை. கூட்டணியும் ஏற்கனவே முயற்சி செய்து, தோல்வியடைந்த கூட்டணி எனவே திரும்ப வர வாய்ப்பில்லை. பாஜக, அதிமுக கூட்டணியை குறித்து தமிழகத்தில் எல்லாரும் விமர்சனம் செய்கின்றனர்.
ஏனென்றால் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் பாஜகவுடன் அதிமுகவினர் கூட்டணி வைத்ததுதான். ஆர்பி உதயகுமார் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது” என தெரிவித்தார்.