“ஈழத் தமிழர் பிரச்னையை அதிமுக தான் கிடப்பில் போட்டது” - திருமாவளவன் பேச்சு!
“ஈழத் தமிழர் பிரச்னையை கிடப்பில் போட்டது, புலிகள் இயக்கம் அழிக்கப்படும் வரை அமைதி காத்த இயக்கம் அதிமுக” என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை அடையாற்றில் உள்ள முத்தமிழ் பேரவையில் மறைந்த எழுத்தாளர் விஸ்வகோஷ் (எ) ராஜேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன், நடிகரும், இயக்குநருமான தங்கர்பச்சன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது:
"மார்க்சிய சிந்தையாளராய் அவரிடம் அறிமுகம் ஆனேன். எளிமையான தோற்றம் கொண்டவர் ராஜேந்திர சோழன். மண்மொழி என்ற புத்தகத்தை எனக்கு அளித்தார். மண்ணும், மொழியும் தவிர்க்க முடியாத அடையாளமாக இந்த சமூகத்தில் இருக்கிறது. நம் அடையாளம் மண்,மொழி ஆகியவை தான். விஷ்வகோஷின் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை நான் வரவேற்கிறேன். இதனை நானும், வேல்முருகனும் நிச்சயமாக முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சொல்வோம்.
மகத்தான ஆளுமை கொண்டவர். அவரை சந்திக்க பலமுறை காத்திருந்தேன். ஆனால்
சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவர் இப்போது இங்கு இருப்பாத நினைத்து கூறுகிறேன். 2009 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது பிரபாகரனை சிங்கள படையினர் சூழ்ந்திருந்தனர். அவர் அப்போது கைது செய்யப்படலாம் அல்லது பிணமாக இருக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். தகவல் அறிந்து தலைவர்களை சந்தித்தேன். ராமதாஸை சந்தித்து பேசினேன். திராவிடர் கழக ஆசிரியர் வீரமணியிடம் இதை சொல்லலாம் என மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறினார்.
நான், மருத்துவர் ராமதாஸ், வீரமணி மூவரும் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து பேசினோம். மருத்துவர் ராமதாஸ் அப்போது பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஜனவரி 12 தேதி நடக்க இருந்த கூட்டம் அப்போது ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வந்தது. பா மக, விசிக இரண்டு கட்சிகள் மட்டும் களத்தில் இருந்தோம். இதில் இருவர் மட்டும் போராட்டத்தில் இருக்கலாம் என்று கூறினேன்.
பிறகு மருத்துவர் போன் செய்து தம்பி இது சரியாக வராது. நீங்கள் கருணாநிதியிடம்
பேசுங்கள் என்று கூறினார்.
பிறகு நான் இரவு நேரத்தில் தாம்பரம் தாண்டி செல்லும் போது ஒரு இடத்தில்
உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டேன். இந்திய அரசே போரை நிறுத்து என்ற கோரிக்கை தான். இரண்டு நாட்களாக தண்ணீர் கூட அருந்தவில்லை. மருத்துவர் நேரில் வந்து தண்ணீர் மட்டும் அறிந்து என்று கூறினார். பிறகு தண்ணீர் அருந்தினேன். திருமா திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக உடன் கை கோர்க்கிறார் என்று
காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
பிறகு மீண்டும் ராமதாஸ் என்னை சந்தித்தார். அவர் சொன்னால் தான் நான்
கேட்பேன் என்று. நான் சொன்னேன் யாரும் வேண்டாம். நாம் இரண்டு கட்சிகள் போதும் என்று கூறினேன். ஒரு தந்தையைப் போன்று நீங்கள் கூறுகிறீர்கள், எனவே போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். ராமதாஸ் அப்போது எனக்கு அவ்வளவு நெருக்கமாக, இணக்கமாக இருந்தார். ஒரு உடன் பிறந்த சகோதரர் போன்று என்னை பார்த்தார். அப்போது அவர் பேச்சைக் கேட்டு தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.
அதன் பின்னர் ராமதாஸ் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். என்னை அழைக்கவில்லை. இருப்பினும் நான் அதில் கலந்து கொண்டேன். மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் அன்று கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் தான், போராட்டத்தை நிறுத்தினேன். நான்கு நாட்களுக்கு அந்த போராட்டம் நடைபெற்றது. நான்கு நாள் போராட்டத்தில் 26 பேர் குண்டர் பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். மூன்று பேர் தீக்குளித்தார்கள். அப்போது மருத்துவர் ராமதாஸ் போன்றோர்கள் நீங்கள் திமுக கூட்டணி இருந்து வெளியே வாருங்கள். அதிமுகவில் இணையலாம் என்று கூறினார்கள்.
தனியே நிற்கலாம் என்றால் கூட சரி. ஆனால் அதிமுக உடன் ஒரு கூட்டணி எப்படி என்று கேட்டேன். ஈழத் தமிழரின் பிரச்சினையை கிடப்பில் போட்டது அதிமுக. அப்போது, ராஜீவ் காந்தி இறப்பிற்கு பிறகு சோனியா காந்தியை விட மிக துயரத்துக்கு ஆளானவர் ஜெயலலிதா. சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று பேசியபோது நானும் வெளிநடப்பு செய்தேன். பாமகவும் வெளிநடப்பு செய்தது. இவ்வாறு இருக்கும் போது அதிமுக எப்படி ஒரு மாற்றாக இருக்கும் என நான் அதிலிருந்து வெளியேறினேன்.
அதிமுக புலிகளை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. 1991 க்கு பிறகு ஈழத்தை
ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஒரு அறிக்கையும் விட்டதில்லை. ஆதரவாக பேசியதும் இல்லை. புலிகள் அழிக்கப்படும் வரை அமைதி காத்த இயக்கம் அதிமுக. ஒரு கோடி உறுப்பினரை கொண்ட கட்சி அப்படியே அமைதி காத்தது. அப்படிப்பட்ட
கட்சியுடன் கூட்டணி சேர்வதில் ஒரு தயக்கம் இருந்தது. அப்போது பல்வேறு விமர்சனங்கள்
எழுந்தன. விமர்சனங்களையும் மறுக்கவும் இல்லை, அதனை தவறு என்று சொல்லவும் இல்லை.
ராஜேந்திர சோழன் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அதில் துணிகிறது. திருமா இது தகுமா உன் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை, உன்னை இமயம் போல நாங்கள் கருதினோம். உன் போராட்டம் நீடித்திருக்க வேண்டாமா என்று அவர் வருந்தி இருக்கிறார். உரிமையோடு இதனை அவர் கூறியிருக்கிறார் . அவர் மீது ஒரு மிகப்பெரிய மரியாதை எனக்கு உண்டு. ராஜேந்திர சோழன் என் மீது வைத்த விமர்சனம், அவருக்கு நான்
தரவேண்டிய விளக்கம் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தியது. அவரைப் பார்க்க வேண்டும்,
அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவரிடத்திலே என்னுடைய நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.
அவர் தற்போது உயிரோடு இருப்பதாகவே எண்ணிக்கொண்டு இந்த விளக்கத்தை நான் தருகிறேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் அன்று அளித்த நம்பிக்கையில், நான் போராட்டத்தை நான்காவது நாட்களில் நிறுத்த வேண்டியது தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. உங்களை நினைத்து தலை வணங்குகிறோம்” என பேசினார்.