தொகுதிப் பங்கீட்டில் அதிமுக – தேமுதிக இடையே மீண்டும் இழுபறி?
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - தேமுதிக இடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.
இதையும் படியுங்கள் : "இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே சுமூக உடன்பாடு எட்டப்படும்" - டி.ராஜா பிரத்யேக பேட்டி!
அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியானது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் அதிமுக – தேமுதிக இடையே இன்று 3 ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போது வரை பேச்சுவார்த்தைக்கு செல்வது குறித்து முடிவெடுக்கவில்லை என தேமுதிக தரப்பில் தகவல் கூறப்படுகிறது.
4 மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் தெரிவித்த நிலையில், மாநிலங்களவை சீட் ஒதுக்க அதிமுகவிடம் மீண்டும் கோரிக்கை தேமுதிக விடுத்துள்ளது. பாஜகவும் தேமுதிக உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நேற்று பிரேமலதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.