டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு முன்னேற்றம்… எட்டு நாட்களுக்கு பின் #AQI 400க்கு கீழ் பதிவு!
எட்டு நாட்களுக்குப் பின் டெல்லியில் இன்று காற்றின் தரக்குறியீடு, 400 புள்ளிகளுக்கு கீழ் பதிவாகி உள்ளது. காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்து மிகவும் மோசமான பிரிவுக்கு முன்னேற்றம்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கும் அதிகமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அடுத்த 2 வாரங்களில் காற்று மாசு அதிகரிக்கும் என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டின் அளவால் அங்குள்ள மக்களின் ஆயுட்காலம் 8.5 வருடங்களாக குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பது, வாகனங்களின் புகை போன்றவற்றால் டெல்லியின் காற்றின் தரம் கடுமையான நிலைக்கு சென்றது. இதனை கட்டுப்படுத்த க்ராப் நிலை 4ன் கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 8 நாட்களாக தொடர்ச்சியாக கடுமையான பிரிவில் இருந்த காற்றின் தரம் , தற்போது சற்று குறைந்து உள்ளது. அதன்படி, தற்போது ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் 379 ஆகப் பதிவானது. இருப்பினும் ஒருசில பகுதிகளில் தரக்குறியீடு 400க்கு மேல் பதிவாகியுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தரவின் படி, ஜஹாங்கிர்புரி மற்றும் வஜிர்பூர் ஆகியவை அதிகபட்சமாக 437 ஆகவும், பவானா 419 ஆகவும், அசோக் விஹார் மற்றும் முண்ட்காவில் 416 ஆகவும் பதிவாகியுள்ளன. அதேவேளையில் வெப்பநிலை குறைந்தபட்சம் 11 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பார்வைத் திறன் குறைந்ததால், விமான சேவை சற்று தடைபட்டது. 97 விமானங்கள் தாமதமானதோடு, 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.