நெதர்லாந்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான் - 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்
நெதர்லாந்து அணியை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பையில் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லக்னோவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி
பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லே பரேசி மற்றும் மேக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்லே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் காலின் அக்கர்மேன் மற்றும் மேக்ஸ் ஓடௌத் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடிய நிலையில் மேக்ஸ் ஓடௌத் 42 ரன்களிலும், காலின் அக்கர்மேன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து ஆடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நிதானமாக விளையாடிய சைபிராண்ட் 86 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 45.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. முதலில் களமிறங்கிய குர்பாஸ் மற்றும் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே அடுத்த வந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லாஹ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்து அணியை ஸ்கோர் எண்ணிக்கை உயர்த்தினர். இந்த நிலையில் 31.3 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
கடந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்ட ஆப்கானிஸ்தான் இன்றையப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.