ஆப்கன் நிலநடுக்கம் - இந்தியாவின் நிவாரணப்பொருட்கள் காபூலை சென்றடைந்தன!
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. தொடர்ந்து அதே பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1400 பேர் உயிரிழந்தனர். மேலும் 3000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை செய்யும் என்று என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியா 21 டன் நிவாரண உதவிப் பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அந்த நிவாரணப்பொருட்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சென்றடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”இந்தியா விமானம் மூலம் அனுப்பிய நிலநடுக்க உதவி பொருட்கள் காபூலை சென்றடைந்தது. போர்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், ஜெனரேட்டர்கள், மருத்துவ நுகர்பொருட்கள் உள்ளிட்ட 21 டன் நிவாரணப் பொருட்கள் இன்று விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்தியா தொடர்ந்து கள நிலைமையைக் கண்காணித்து, வரும் நாட்களில் மேலும் மனிதாபிமான உதவிகளை அனுப்பும்”
என்று தெரிவித்துள்ளார்.