“ராமர் கோயில் விழாவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள வேண்டாம்” - ராமர் கோயில் அறக்கட்டளை
பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் வயதைக் கருத்தில் கொண்டு குடமுழுக்கு விழாவிற்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக பாஜக தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் வர வேண்டாம் என்று கோயில் அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது.
அவர்கள் இருவரின் வயதை கருத்தில் கொண்டே விழாவுக்கு வர வேண்டாம் என்று கோயில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டதாகவும், இதனை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.
மேலும் அவர், 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 15 ஆம் தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும். மூலவர் ராமர் பிரதிஷ்டைக்கான பூஜை ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும்.
முன்னாள் பிரதமர் தேவகௌடாவை நேரில் சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு சுமார் 4,000 துறவிகள் 2,200 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சங்கராச்சாரியார்கள், 150 துறவிகள், முனிவர்கள் விழாவில் பங்கேற்பார்கள். ஜனவரி 23 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.