” LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு" - இபிஎஸ் கண்டனம்!
எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் உள்ளதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி ஆகும். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் அதன் இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது.
மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது. மொழி என்பதை குறிக்கும் "பாஷா" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், இந்த நிலையில் எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் இந்தி மொழிக்கு மாறியதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி | அரையிறுதியில் இந்தியா – ஜப்பான் இன்று மோதல்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் :
"பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.