’வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு’- உச்ச நீதிமன்றம்!
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி ஆவார். இவர் வந்தாரா என்னும் விலங்குகள் நலவாழ்வு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இது குஜராத்தின் ஜாம்நகரில், ரிலையன்ஸ் சுத்திகரிப்பு வளாகத்திற்குள் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வந்தாராவில் 2,000 க்கும் மேற்பட்ட அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகள் பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய சுகின் என்பவர் ஆனந்த அம்பானியின் வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையிலான அமர்வில் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் சம்பந்தப்பட்ட நபர்களை எதிர் மனுதாரராக இணைக்காமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் "வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையம், மத்திய அரசு ஆகியோரை எதிர் மனுதாரராக இணைக்கவும், அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் இந்த வழக்கு தொடர்பான மனுவின் நகலை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு மீதான விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.