செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு - சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்ய நிலையில், விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாகாக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன.
இதையும் படியுங்கள் : “எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல” – வைகோ பேட்டி!
இதையடுத்து, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் - 27 ) மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.