உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு - ஏன் தெரியுமா?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 28 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
"ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஆக.4 அன்று நடைபெறவிருத்த நிலையில், நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.