"அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை" - அதிமுக ஐ.டி. விங் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மே 20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எழுப்பப்பட்ட கூட்டணி குறித்து கேள்விக்கு, "திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்தார்.
அந்த நிலைபாட்டில் அவர் தெளிவாக உள்ளார்" என கூறினார்.
பின்னர் தவெக ஏன் அதிமுகவை எதிர்ப்பது இல்லை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, "அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என விஜய் அறிக்கை வெளியிட்டார். அதைவிட வேறு என்ன வேண்டும். அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுக சமீபத்தில் நடந்த பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. அதிகவுக்கு மக்களே நல்ல தண்டனை கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியை எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
"தொழிலதிபராக இருந்து, "திடீர்" அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்குஅதிமுக பற்றி பேச எள்ளளவும் தகுதி இல்லை. இன்று தவெக-வில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை!"
இவ்வாறு அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.