கச்சத்தீவு வழக்கில் கருணாநிதிக்கு பதிலாக டி.ஆர்.பாலு மனுதாரராக சேர்ப்பு!
கச்சத்தீவை மீட்கக்கோரி அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா, மற்றும் ஏ.கே.செல்வராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,
“இந்த வழக்கில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவும் உள்ளது. அதனையும் விசாரணைக்கு ஏற்க வேண்டும், அதில் தற்போது மனுதாரர் மறைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக தி.மு.க கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவை இணைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
நீதிபதிகள்:-
“கச்சத்தீவு வழக்கில் கருணாநிதிக்கு பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர் பாலுவை மனுதாரராக சேர்த்து உத்தரவிடுகிறோம்” என தெரிவித்தனர்.
அதேபோல இந்த வழக்கில் சில மனுதாரர்களுக்காக ஆஜராக புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அதற்கான வக்காலத்துகள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே அதனை செய்வதற்காக வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று வழக்கு செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.