பிக் பாஸ் நிகழ்ச்சியில் #MeToo புகார் தெரிவித்த விசித்திரா! யார் அந்த பிரபல கதாநாயகன்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை விசித்திரா, பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 தனியார் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. நீண்ட காலமாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த பிரபல நடிகை விசித்திராவும் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். தற்போதைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில், மிகவும் வயதான போட்டியாளராக விசித்திரா உள்ளார்.
ஓரிரு வாரங்களில் பிக் பாஸிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 50 நாள்களை கடந்தும் போட்டியில் நீடித்து வருகிறார். ரசிகர்களின் பேராதரவும் விசித்திராவுக்கு உள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் நேற்று ‘உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய பூகம்பத்தால் தடுமாறிய சம்பவம்’ குறித்து போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதில், ஒவ்வொரு போட்டியாளராக தங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான சம்பவம் குறித்தும் அதிலிருந்து மீண்டது குறித்தும் பேசினர். அப்போது பேசிய விசித்திரா, பிரபல நடிகர் ஒருவர் தன்னை படுக்கை அறைக்கு அழைத்ததாக தெரிவித்தார்.
“2001-ம் ஆண்டுக்கு பிறகு நான் நடிக்காததற்கு இதுதான் காரணம். இந்த சம்பவம் யாருக்கும் தெரியாது. ஆனால், இன்று வரை என் மனதில் ஆறாத காயமாக இருக்கிறது. முன்னணி நடிகராக இருப்பவரின் படத்தில் நடிக்கச் சென்றிருந்தேன். அப்போது, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் சார்பாக அளிக்கப்பட்ட விருந்துக்கு சென்ற போது, படத்தின் கதாநாயகனை சந்தித்தேன். என்னை பார்த்த அந்த நடிகர், என் பெயரைகூட கேட்காமல், நீங்கள் இந்த படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றவுடன், எனது அறைக்கு வாங்க என அழைத்தார்.
இதனைக் கேட்டவுடன் செய்வதறியாது எனது அறைக்குச் சென்று பூட்டிக் கொண்டேன். மேலும், அந்தப் படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரை பிடித்து சண்டை பயிற்சியாளரிடன் தெரிவித்த போது, அந்த பயிற்சியாளர் என் கன்னத்தில் அறைந்தார். தமிழ் படங்களில் நடிக்கும் போது, சண்டை பயிற்சியாளர்கள்தான் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், அங்கு மட்டும் வித்தியாசமாக நடந்தது.
இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்தும் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு 100 படங்களுக்கு மேல் நடித்திருந்தேன். ஆனால், எனக்காக ஒருவரும் கேள்வி கேட்க முன்வரவில்லை. மரியாதையும், கண்ணியமும் கிடைக்காத ஓரிடத்தில் இருக்க வேண்டாம் என்று திரைத்துறையிலிருந்து விலகிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகை விசித்திரா புகாரை தெரிவித்த நிலையில், பிரபல தெலுங்கு மூத்த நடிகர் ஒருவரின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகிறது.