நடிகை சௌந்தர்யா மரணம் : விபத்தா? கொலையா? புதிய சர்ச்சை!
1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சௌந்தர்யா. தமிழில் படையப்பா, அண்ணாமலை, சொக்கத்தக்கம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இவர் விமான விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை என புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சௌந்தர்யாவின் மரணம் ஒரு விபத்து அல்ல, மாறாக சொத்து தகராறுடன் தொடர்புடையது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் மோகன் பாபு மீது ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் தொடர்ந்துள்ள புகாரில், நடிகர் மோகன் பாபு, சௌந்தர்யா மற்றும் அவரது சகோதரரை ஷம்ஷாபாத்தில் உள்ள ஆறு ஏக்கர் நிலத்தை விற்க அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும், இதனால் நடிகர் மோகன் பாபுவுக்கும், சௌந்தர்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் சௌந்தர்யாவின் மரணத்திற்குப் பிறகு, மோகன் பாபு அந்த நிலத்தை கையகப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விமானம் விபத்துக்குள்ளானதில் சதித்திட்டம் இருக்கிறதா? மோகன் பாபுவுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 17, 2004 அன்று, ஒரு அரசியல் நிகழ்வுக்காக கரீம்நகருக்கு விமானத்தில் சென்றபோது, சௌந்தர்யா விமான விபத்தில் இறந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. விமானம் வெடித்து சிதறியதால், அவரது உடல் மீட்கப்படவில்லை.