நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
தென்னிந்திய திரைப்பட உலகின் 1960 களில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 4 மொழிகளில், சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்ம ஸ்ரீ விருது பெற்ற சரோஜா தேவி, தனது நடிப்பில் காட்டும் நளினம் மற்றும் முகபாவனைகளால் கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
நடிகை சரோஜா தேவி, பெங்களூரு மல்லேஸ்வரம் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலமானார். இதனை தொடர்ந்து, ஏராளமான அரசியல்வாதிகளும், திரைப்பிரபலங்களும், அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று பகல் 11 மணி வரையில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சரோஜா தேவியின் உடல், பின்னர், அவரது சொந்த ஊரான சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சரோஜாதேவியின் விருப்பத்திற்கிணங்க, அவரது தாயார் ருத்ரம்மாவின் கல்லறை அருகே, ஒக்கலிகர் சமூக முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பின்னர், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகை சரோஜா தேவியின் இறுதிச் சடங்கில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.