Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு! தலைமைச்செயலக சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டனம்! நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு வலியுறுத்தல்!

10:25 PM Nov 06, 2024 IST | Web Editor
Advertisement

இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்துாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச்செயலக சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக தலைமைச்செயலக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகை கஸ்தூரி கடந்த 04.11.2024 திங்கட்கிழமை அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு வந்த பின்னர்தான் லஞ்ச லாவண்யம் மலிந்து விட்டது எனவும் இட ஒதுக்கீட்டினால் அரசுப் பணிக்கு வந்தவர்கள் செய்த ஊழல்களால் பல்வேறு வகைகளில் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இது தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மைக்குப் புறம்பான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இட ஒதுக்கீட்டினால் அரசுப் பணிக்கு வந்த ஊழியர்கள்மீது கூறியுள்ள நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வன்மையாகக் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் 1967ல் பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்தான், தந்தை பெரியாரின் கனவினை நனவாக்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பட்டியலின மக்களுக்கு பல்லாயிரமாண்டு கால ஒடுக்கப்பட்ட இழிநிலையினைக் களைந்து, இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தினை கையிலெடுத்து விடியலைத் தந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அரியணையில் திராவிடக் கட்சிகள் யார் இருந்தாலும், இட ஒதுக்கீட்டினை பாதுகாப்பதில் எள்ளளவும் சமரசமின்றி செயல்பட்டுள்ளார்கள். அதிலும், குறிப்பாக 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை உத்தரவாதப் படுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பில் உரிய பாதுகாப்பினையும் திராவிடக் கட்சிகள் தான் செய்துள்ளன என்பது வரலாறு.

பல்லாயிரம் ஆண்டுகளாக சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தற்போது ஓரளவு பொருளதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருப்பதை பார்த்து காழ்ப்புணர்ச்சி கொண்ட நடிகை கஸ்தூரி, இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களின்மீது விஷத்தையும் வன்மத்தையும் கக்கி இருக்கிறார். ஊழல், லஞ்ச லாவண்யம் என்பது இட ஒதுக்கீட்டிற்குப் பின்னர்தான் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே காலுான்றி வைப்பது போல் உயர் வர்ண திமிரோடு பேசியிருக்கிறார். அரசு வேலைவாய்ப்பிற்கு அப்பாற்பட்டு தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த வண்டும் என்ற கருத்து பெருன்பான்மையாக உருப்பெறும் தருணத்தில், இதனை எல்லாம் எதிர்கொள்ளத் திராணி இல்லாமல் சமூக நீதிக்கு எதிரான வன்மமான கருத்துகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

ஆட்சிக் கட்டிலில் யார் இருந்தாலும், மாநில மற்றும் மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை செயவ்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் பங்கு அளப்பற்கரியது. இதற்கு சாட்சியாக திட்டங்களை தீட்டுவதிலும் செயல்படுத்துவதிலும் அத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சேரும் வகையிலும் செயலாற்றி, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் துறை வாரியாக வழங்கும் பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இதற்கு அடித்தளமாக களப்பணியில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள்தான் என்பதும் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான் என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.

அதோடு மட்டுமல்லாமல், பேரிடர் நேரங்களிலும் சுகாதாரப் பெருந்தொற்று காலங்களிலும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களைக் காக்கும் பணியினை அரசு ஊழியர்கள்தான் மேற்கொண்டிருக்கிறார்கள், தொடர்ந்தும் மேற்கொள்வார்கள். சமூக நீதிக்கு எதிராகவும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் அரசுப் பணியில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பட்டியலின மக்களை நாட்டை சுரண்டும் ஊழல் பேர்வழிகள் என பேசியுள்ள நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பிலும் நடிகை கஸ்தூரியை கண்டித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திரைப்பட நடிகை கஸ்தூரி தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் அதிக லஞ்ச லாவனியம் பெற்று, அளவிற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளனர் என்றும், இவர்களால்தான் அரசுத்துறைகளில் மிக அதிகமான அளவில் ஊழல்கள் மலிந்துள்ளதாகவும், பொத்தாம் பொதுவாக, தரம்தாழ்ந்த ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை பொது வெளியில் தெரிவித்துள்ளார்.

தனியரின் தரக்குறைவான ஆதாரமற்ற இப்பேச்சிற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் அரசின் திட்டங்களை பொது மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்திடும் பொருட்டு, இரவு பகல் பாராமலும், கண் துஞ்சாமலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பணிபுரிந்து அரசுக்கு நற்பெயர் ஈட்டித்தரும் இவ்வேளையில், எங்கோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒருசில குறிப்பிட்ட பிரிவுகளைச் சார்ந்த அரசு அலுவலர்களின் பணியினை கொச்சைப்படுத்திடும் விதமாக எவ்வித அடிப்படை ஆதாரமின்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் தெரிவித்திருப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்த விழைகிறார் என்றே கருதுகிறோம்.

தனியரது இம்மாதிரியான தரம்தாழ்ந்த பேச்சு மாநிலம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதியை நீண்ட நெடுங்காலமாக கடைபிடித்துவரும் தமிழ் மக்கள் இதனை அனுமதிக்கமாட்டார்கள். எனவே, குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை ஏற்படுத்திடும் விதமாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Government StaffKasthurinews7 tamilReservationTamilNadu
Advertisement
Next Article