நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் - ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'. இந்த படத்தில் நடிகர்கள் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் 'மதகஜராஜா' திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் வருகின்ற ஜன.12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரி ரீலிஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், சுந்தர் சி, குஷ்பு, படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விஷால் மேடையில் பேசிய போது மைக்கை பிடிக்க முடியாமல் ஒருவிதமான நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் பேசினார்.
இதனை தொடர்ந்து விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார். இந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் விஷால் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தபட்டுள்ளது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.